Sunday, August 30, 2015




தொழில்முறைக் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவதற்கான சலுகைக் காலத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் தொழில்முறை படிப்புக்காக கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வட்டி சலுகை பெற வங்கிகளிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இது ஒரு முறை அளிக்கும் சலுகை என தெரிவித்துள்ளது.
மாணவர்கள் உயர் கல்வி படிப்பைத் தொடர்வதற்கு வங்கிகள் கடன் அளிக்கின்றன. படிக்கும் காலத்திலும், பிறகு வேலையில் சேரும் காலம் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
பிளஸ் 2 படித்து தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்முறை படிப்பு (இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவம்) படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் பெற்றுள்ள கடனுக்கான வட்டித் தொகையை அரசு அளித்துவிடும். இந்த சலுகை 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி தொழில்முறை படிப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத் துக்கு மேல் இருக்கக் கூடாது.
வட்டி சலுகை பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் செலுத்த வேண்டிய வட்டித் தொகையை மத்திய அரசு செலுத்திவிடும்.
இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மூலம் கல்விக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும் இந்த கல்விக் கடன் வட்டி சலுகை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்ததும் வட்டி மற்றும் அசலை திரும்பச் செலுத்த வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இதன்படி சலுகை பெற விண்ணப்பிக்காத பெற்றோர்கள் தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கிகளில் வட்டிச் சலுகை பெற விண்ணப்பிக்கலாம்.
வங்கிகளில் இவ்விதம் அளிக்கும் வட்டிச் சலுகை பற்றிய விவரத்தை கனரா வங்கி ஒன்று திரட்டி மத்திய அரசிடமிருந்து பெற்று சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அளிக்கும்.
இதன்படி இவ்விதம் வட்டிச் சலுகை அளிக்க வேண்டிய தொகை பற்றிய விவரத்தை வங்கிகள் தங்களது இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனித வள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி வங்கிகளின் இணையதளம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை செயல்படும். அதற்குள் மாணவர்களின் பெற்றோர்களும் கடன் வாங்கிய வங்கிகளும் இத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment