உண்ணாமலைக்கடையில் ஓர் உன்னத விழா!
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகில் ஒரு டாஸ்மாக்கடை இருந்தது. அக்கடையினால், அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.
அதனால் அக்கடையை, அங்கிருந்து அகற்றக்கோரி அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் மதுபோதைக்கெதிரான பொதுமக்கள் இயக்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். எனினும் அதிகார வர்க்கம் அசையவில்லை.
அப்போராட்டத்தின் உச்சக் கட்டம்தான் லட்சியவாதி சசிபெருமாளின் உயிரை கயவர்களால் காவுகொள்ளப்பட்டது. அன்னாரின் தியாகத் திருநாளின் முதலாண்டு நெருங்கி வரும் வேளையில், அப்பள்ளியில் உலக போதை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது.
கூடவே அப்பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் முந்தி நின்ற மாணவியருக்கு பாராட்டு விழாவும், கடமையுணர்புடன் பணியாற்றி ஓய்வு பெறும் நிலையிலுள்ள அவ்வூர் தபால்காரர் திரு.சுகுமாரன் நாயர் அவர்களை கௌரவிக்கும் விழாவும் நடந்தது.
விழாவில் இயக்க ஒருங்கிணைப்பாளரும், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அருமை சகோதரர் பயணம் முனைவர் இராபர்ட்குமார் அவர்களை அடியேன் அன்போடு பாராட்டிய போது அனைவரும் நெகிழ்ச்சியில் உறைந்தார்கள்.
கூடவே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முனைவர் பத்மகவி குற்றாலதாசன் அவர்கள் பேசும்போது இன்று முதல் இந்த ஊரின் பெயரை மது உண்ணாமலைக்கடை என அழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவ்விழாவில் சசிபெருமாளின் நினைவுகள் என் இதயத்தை இறுக்கிப் பிடித்தாலும், அன்னாரின் தியாகம் அனைவரையும் கௌரவப்படுத்தியுள்ளது என்பதை நினைக்கும் போது மன நிறைவாக இருந்தது.
No comments:
Post a Comment