Friday, June 3, 2016

32 ஆண்டுகளாக பாடி பரந்த இந்த வான்குயில் இன்றுடன் (31-5-2016) ஓய்வு பெற்று கொண்டது.












32 ஆண்டுகளாக பாடி பரந்த இந்த வான்குயில் இன்றுடன் (31-5-2016) ஓய்வு பெற்று கொண்டது.
இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் வட்டார வானொலி என்ற பெருமை நமது குமரிபண்பலைக்கு உண்டு. 1984ம் ஆண்டு பகுதிநேர ஒலிப்பரப்பாக "அகில இந்திய வானொலி நிலையம், நாகர்கோவில்" என்ற பெயரில் தனது சேவையை தொடங்கியது. சேவை துவங்கிய நாள் முதல் பண்பலை பணியாளர்களாக தன் பணியை துவக்கியவர்தான் மங்காவிளை திரு.D.ராஜேந்திரன் அவர்கள்.
குமரி மாவட்டத்திலுள்ள இலட்சத்திற்கும் மேற்பட்ட நேயர்களின் இதய சிம்மாசனத்தில் நீங்கா இடம்பிடித்த தனிபெரும் அறிவிப்பளராய் 32ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளார். கேட்போரை கவர்ந்து ஈர்க்கும் காந்தக் குரல்,குமரி மண்ணின் இயல்பு மங்காத மங்காவிளையின் வட்டார மொழி, கிண்டலும், நையாண்டியுமான கலகலப்பு பேச்சும், நேயர்களை அதிகம் இவர் பக்கம் செவி திருப்ப செய்தது. தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் அளவிற்கு இனிய மொழியில் பேசும் நல்ல பண்பாளர்.
நிகழ்ச்சி அறிவிப்பாளராக, நிகழ்ச்சி அமைப்பாளராக,வருணனையாளராக, நிலைய பொறுப்பாளராக என்றெல்லாம் பல அவதாரங்களில் நாகர்கோவில் வானொலி நிலையத்தில் திரு.ராஜேந்திரன் பணியாற்றிவுள்ளார்.
பண்பலை முழு நேர ஒலிப்பரப்பை துவங்கியபின் பல புது நிகழ்ச்சிகளை சமூகம் பயன்பெறத்தக்க வகையில் உருவாக்கி நேயர் வட்டத்தை விரிவுபடுத்தினார். அடர்ந்த காட்டிலும், உச்சாணி மலையிலும்,ஆழ்கழி முகத்திலும் பயணித்து முகவரி இல்லா கிராமங்களை குமரி மக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
குமரியின் வரை கோடுகளின் இவர் பாதம் படாத இடம் இலை என்னும் அளவிற்கு மாவட்டம் முழுவதும் பயணித்து மக்களின் தேவைகளை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு அதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடும் ஒரு போராளியாகவும் விளங்கினார்.
பல உட்புற கிராமங்களுக்கு சாலைஅமைந்தது இவர் முயாற்சியால். நாகர்கோவிலில் மத்தியஅரசு பள்ளிக்கூடம் துவங்க முழுமுதற் காரணமாக இருந்தவர் இவரே.பல ஊர்களில் நியாயவிலை கடைகள் திறக்க அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி பலன் கிடைக்கும் வரை முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
2010ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் உயர்திரு ராஜேந்திர ரத்னு IAS அவர்கள் பிளாஸ்டிக் தவிர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்திய போது அத்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து திட்டம் வெற்றிபெற ஒத்துழைத்த "சிறந்த ஊடகங்கள்"என்ற விருதினை குமரி பண்பலைக்காக திரு.மங்காவிளை ராஜேந்திரன் அவர்களுக்கும் CNR தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய எனக்கும் ஆய்ச்சியர் விருது வழங்கி சிறப்பித்தது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அமைப்பு குழுவில் முன்னர் குறிப்பிட்ட இரு ஊடங்களுக்காக நாங்கள் எங்கள் இருவரையும் ஆட்சியர் அக்குழுவில் இணைத்து பணியாற்ற செய்ததும் மறவா நினைவுகளாகின்றன.
குமரி மாவட்டத்தை சுனாமி தாக்கிய போதும் 2010ஆம் ஆண்டு புயல் மற்றும் பெருமழை தாக்கிய போதும் ஒரு நிமிடம் ஓயாது உழைத்திட்ட மங்காவிளையாரின் மகத்தான பணிக்கு ஈடு இணை இல்லை.
வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சமூக போராளியாகவும் தன் பணிக்காலத்தை கழித்துள்ளார் திரு.ராஜேந்திரன். ஊர்கள் தோறும் உருவான படைப்பாளர்களையும் கலைஞர்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் குரல் கேட்காமல் குமரி பண்பலை நேயர்களின் வீடுகளில் பொழுது விடிவதில்லை என்ற அளவிற்கு வானலையில் பறந்து காதுகளில் கீதம் பாடிய இந்த வான்குயில் இன்றுடன் ஓய்வு பெற்று கொண்டது. காலம் ஓய்வழித்தாலும் இவர் குரல் கேட்ட காதுகளில் "மங்காபுகழ் மங்காவிளையாராய்"ரீங்காரித்து கொண்டே இருப்பார்.
கட்டுரையாக்கம்: பேராசிரியர் மு.முஹம்மது அஸ்கர்.

No comments:

Post a Comment