கன்னியாகுமரி: சசிபெருமாள் உயரிழப்பு குறித்து தற்கொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுவதாக கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி இன்று (31ஆம் தேதி) அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தியபோது திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி மவாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''சசிபெருமாளிடம் 7 நாளில் மதுபானக் கடையை மூடுவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இன்றே மூடவேண்டும் எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறினார். அப்போது அவரை தடுப்பதற்காக காவலர்கள் சென்றனர். ஆனால், அங்கிருந்த மக்கள் காவலர்களை தடுத்ததால், சசிபெருமாள் டவர் மீது ஏறியதை தடுக்க இயலவில்லை. தனது உடலில் கயிறு கட்டிக்கொண்டு, சசிபெருமாள் போராட்டம் நடத்தியதால் அவர் இறந்திருக்கலாம். தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும், அவரது உடல் பரிசோதனை முடிந்ததும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
No comments:
Post a Comment