Sunday, June 21, 2015

மாற்று திறனாளி பெண் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய சுரேஷ்கோபி
திருவனந்தபுரம் கரமனையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 17) மாற்று திறனாளியான இவருக்கு பார்வை திறன் குறைவு. மேலும் காதும் சரியாக கேட்காது.

இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தனது பெரியம்மா சரஸ்வதி பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். மாற்று திறனாளியாக இருந்தாலும் பிரியங்காவுக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு.

குறிப்பாக தபேலா இசைக் கருவியை பிரியங்கா சிறப்பாக வாசிப்பதில் வல்லவர். இவர் அந்த பகுதியில் நடந்த ஒரு கோவில் விழாவில் இசை கச்சேரியில் தபேலா வாசித்தார். அவரது திறமையை பார்த்து வியந்தவர்கள் அவரை பாராட்டினர்.

அப்போது பிரியங்கா தான் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபியின் ரசிகை என்றும் அவரை நேரில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பின்னணி பாடகி சித்ராவை சந்திக்கவும் தனக்கு விருப்பம் என்று தெரிவித்தார்.

பிரியங்காவின் விருப்பம் பற்றி மலையாள பத்திரிகைகளில் வந்த செய்தியை நடிகர் சுரேஷ்கோபி பார்த்தார். உடனே அவர் பிரியங்காவின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து பிரியங்காவின் வீட்டிற்கு சுரேஷ்கோபி சென்றார்.

தனது வீட்டிற்கு திடீர் என வந்த சுரேஷ்கோபியை பார்த்த பிரியங்கா மகிழ்ச்சி அடைந்தார். தான் காண்பது கனவா? நனவா? என வியந்தார். அவரிடம் சுரேஷ்கோபி அன்புடன் பேசினார். அவரது இசை ஆர்வத்தை அறிந்த சுரேஷ்கோபி பிரியங்காவுக்கு தபேலாவை பரிசளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் பிரியங்காவின் இன்னொரு ஆசையான பின்னணி பாடகி சித்ராவை சந்திப்பதையும் தான் நிறைவேற்றி வைப்பதாக பிரியங்காவிடன் உறுதி அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அந்த பகுதிக்கு சுரேஷ்கோபி வந்த தகவல் பரவியதும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment