முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 83.

ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன், தலைமைச் செயலர் வாஜிரி, ஆகியோர் கலாம் அனுமதிக்கப்பட்ட பெதானி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 

ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 1931-ம் ஆண்டு பிறந்தார் அப்துல் கலாம்.

1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அழைக்கப்படுபவர் அப்துல் கலாம். 

பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார் அப்துல் கலாம். தமிழகத்திலிருந்து 3-வது குடியரசுத் தலைவராவார் அப்துல் கலாம். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்துல் கலாம் மறைவையடுத்து நாளை (செவ்வாய்) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள் இரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 83. 

அவரது மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய் காலை அவரது உடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு:

அப்துல் கலாம் 1931, அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜைனுலாபுதீன், ஒரு படகுக்குச் சொந்தக்காரர். அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார். 

பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை கொண்டு போடும் வேலையில் இருந்தார். படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது. 

ராமநாதபுரம் ஷ்வார்ட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தார். இங்கு பவுதிக பட்டப்படிப்பை 1954-ம் ஆண்டு நிறைவு செய்தார். 

அதன் பிறகு 1955-ம் ஆண்டு சென்னை வந்த அப்துல் கலாம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் நுழைந்தார். இந்திய விமானப்படையின் போர் விமானி ஆகவேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை, காரணம், 8 இடங்களே கொண்ட பணியின் தகுதிச்சுற்றில் அவர் 9-வது நபராக முடிந்தார்.

பிறகு 1960-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். 

இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா

உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.