மதுவிலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தனது போராட்டத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார். இப்போராட்டத்தில் மதுவிலக்கு போராளி சசிபெருமாளும் கலந்து கொள்வார் எனக் கூறியிருந்தார்.
அதன்படி சசிபெருமாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உண்ணாமலை பகுதிக்கு வந்தர். அப்போது அவரும், ஜெயசீலனும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயசீலன் பாஜகவைச் சேர்ந்தவர். அவர் செல்போன் கோபுரத்தின் பாதி வழியில் அமர்ந்து கொண்டார். சசி பெருமாள் கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கே ஏறிவிட்டார்.
தகவலறிந்து, சுமார் 8.30 மணியளவில், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து, தக்கலே டிஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தடைந்தனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் வரவிலை.
சசிபெருமாள் போராட்டத்தை துவங்கி 5 மணி நேரத்துக்குப் பின்னர் டாஸ்மாக் உயரதிகாரி அங்கு வந்துள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் உண்ணாமலை பகுதியில் இருந்து ஏற்கெனவே கடையை அகற்றுவதாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது என்றனர். உண்ணாமலை பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை மூடப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளனர்.
அதன்பின்னர் செல்போன் கோபுரத்திலிருந்து அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன.
மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சசிபெருமாள் திடீர் மரணத்துக்கு அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததுகூட காரணமாக இருக்கலாம். இருப்பினும், உறுதியான தகவல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.
சசிபெருமாள் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். கடந்த 2014 ஆண்டு அவர் தொடர்ந்து 34 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூரண மதுவிலக்கு கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டம் நடத்தியிருக்கிறார்.
சுளீர் கருத்து:
சில மாதங்களுக்கு முன்பு 'தி இந்து'வுக்கு சசிபெருமாள் அளித்த பேட்டி ஒன்றில் பூரண மதுவிலக்கு குறித்து சுருக்கமாக கூறியது, அவரது நோக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தும். அதன் முக்கிய அம்சம் இதுதான்:
"சரித்திரப் பெருமை வாய்ந்த தமிழகத்தை, 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சாராய முதலாளிகள் ஆண்டு வருகிறார்கள். அப்படி ஒரு கரும்புள்ளி வரலாறாக, தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். சாராய சாம்ராஜ்யத்தை நடத்த, சட்டமன்றத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அடுத்தவர் காய்ச்சினால் கள்ளச்சாராயம்; அரசே காய்ச்சினால் நல்ல சாராயம் என்று விற்கிறார்கள். இதனால், இலங்கையில் இனப் படுகொலை நடந்ததுபோல், தினமும் தமிழகத்தில் சாராயப் படுகொலைகள் நடந்து வருகின்றன. சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைவரும் போராட களம் இறங்கியுள்ளார்கள். இது 2-வது சுதந்திரப் போராட்டமாக மாறியுள்ளது."
தலைவர்கள் இரங்கல்:
சசிபெருமாள் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது, "சசிபெருமாள் இறப்பு அதிச்சியளிக்கிறது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார்.
சசிபெருமாள் போராட்டக் களத்திலேயே உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தாமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நண்பர் வேதனை:
சசிபெருமாளின் நண்பர் சசிதரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வந்தார். உண்ணாமலை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். காலை முதலே கடும் வெயில் அடித்து வந்தது. அதையும் பொருட்படுத்தாது அவர் உற்சாகத்துடன் போராடினார். ஆனால், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கருத்து:
மதுவிலக்கு கோரி போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறும்போது, "சசிபெருமாள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சசிபெருமாள் நீண்ட நாட்களாக மதுவிலக்கு கோரி போராடி வருகிறார். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். அண்மைகாலமாக செல்போன் கோபுரங்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார். அவர் தொட்ர்ச்சியாக போராடியும்கூட அரசு அவரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசு, ஒரு போராளியின் உயிரை துச்சமாக நினைத்ததாலேயே இந்த அவலம் நடந்துள்ளது" எனக் கூறினார்.
சசிபெருமாள் இறப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்
சசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை என்ற இடத்தில் பள்ளி, கோயில்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்பிறகும் மதுக்கடை அகற்றப்படாததைக் கண்டித்து தான் அவர் செல்பேசி கோபுரத்தில் ஏறி இன்று போராட்டம் நடத்தினார்.
அவரது கோரிக்கையை ஏற்று ஒரே ஒரு மதுக்கடையை அகற்றியிருந்தால் மது ஒழிப்புக்காக போராடி வரும் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட தமிழக அரசு மனசாட்சியின்றி நடந்து கொண்டதன் விளைவாக சசி பெருமாளை நாம் இழந்து நிற்கிறோம். சசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
சசி பெருமாளின் மறைவு மது ஒழிப்பு போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சசிபெருமாளின் விருப்பப்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.