இலங்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சவின் கனவு கலைந்தது.
அவர் செவ்வாய்க்கிழமை மாலையே அதிபர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் அமைச்சரவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 22 மாவட்டங்களில், ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கே பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கிறது

இலங்கையின் 8-வது நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 225 உறுப்பினர்கள் கொண்ட அவைக்கு 106 இடங்களில் வெற்றியுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பார் என்று முன்கூட்டியே தெரிந்த விஷயமே.

மொத்தம் 225 தொகுதிகளில் மாவட்ட அளவு இடங்கள் 196. இதற்குத்தான் வாக்குப்பதிவுகள் திங்களன்று நடைபெற்றது. வாக்குகள் பதிவான எண்ணிக்கைகளின் படி தேசியப் பட்டியலின் கீழ் இடங்கள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசிய கட்சி 93 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார முறையில் மேலும் 13 இடங்களைப் பெற்று 106 இடங்களைப் பெற்றுள்ளது.

83 இடங்களில் வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 83 இடங்களில் வெற்றி பெற்றதோடு, வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாசார முறைப்படி மேலும் 12 இடங்களை தேசிய பட்டியலின் கீழ் பெற்று மொத்தம் 95 இடங்களைப் பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கட்சி/இலங்கை தமிழ் அரசுக் கட்சி 16 இடங்களைப் பெற்றது. ஜனதா விமுக்தி பெரமுனா 6 இடங்களையும் இலங்கை முஸ்லிம் கட்சி மற்றும் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தையும் பெற்றன. தமிழ் தேசியக் கட்சிக்கும், ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கும் தேசியப் பட்டியலின் கீழ் தலா 2 இடங்கள் கிடைத்தன.

தொகுதி வாரியாக, 4.30 மணியளவில் 196 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 93 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 83 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஜனதா விமுக்தி பெரமுனா 4 தொகுதிகளிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தையும் வென்றுள்ளன.

தொகுதி வாரியாக 3.30 மணியளவில் 184 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் ஐக்கிய தேசிய கட்சி 88 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 81 தொகுதிகளிலும், தமிழ் தேசிய கட்சி/இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 தொகுதிகளிலும், ஜனதா விமுக்தி பெரமுனா 4 இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட அறிக்கையில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பண்பட்ட சமூகத்தை உருவாக்குவோம். இலங்கையை புதிய தேசமாக உருமாற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ராஜபக்ச, "நான் பிரதமராகும் கனவு தகர்ந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடனான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டேன். நல்ல போட்டியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முந்தையச் செய்திப் பதிவுகள்:
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில், நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.எஃப்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜபக்ச நமது செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஐக்கிய தேசிய கூட்டணி 11 மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீதமுள்ள 3 மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டது.
ராஜபக்ச மறுப்பு:
ஆனால், இத்தகவலை ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. எனவே, இப்போதே வெற்றி, தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
70 சதவீத வாக்குப்பதிவு
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தத் தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் (யுபிஎப்ஏ) பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (யுஎன்பி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் உள்ள 29 பேர் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப நியமிக்கப்படுவர். இதில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
தேர்தல் களத்தில் மொத்தம் 6,151 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,653 பேரும் சுயேச்சைகளாக 2,498 பேரும் களத்தில் உள்ளனர்.
ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக நாடு முழுவதும் 12,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் பணியில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப் பாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
ராஜபக்சவின் பிரதமர் கனவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் (யுபிஎப்ஏ) பிரதமர் கனவுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
ஆனால் அந்தக் கூட்டணியின் தலைவரும் அதிபருமான மைத்ரி பால சிறிசேனா, ராஜபக்சவை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்த்தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கினார் சிறிசேனா. இவருக்கு எதிரிக்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரம சிங்கே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ராஜபக்சவை வீழ்த்தி சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.