பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்டோமேட்ரி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த பட்டப் படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றன.
பூர்த்தி செய்யப்பட்ட 20,940 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தகுதியான 20,130 பேருக்கான தரவரிசைப் பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறாது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “ தமிழகத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி நர்ஸிங் படிப்புக்கு 250 இடங்களும், 2 அரசு கல்லூரிகளில் பி.பார்ம் படிப்புக்கு 120 இடங்களும் உள்ளன. அனுமதிக்கப்பட்ட தனியார் கல்லூரிகளின் விவரம் இன்னும் முழுமையாக வரவில்லை” என்றார்.